சென்னை: அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் - கட்டுமான நிறுவனங்கள் மீது வழக்கு
|சென்னையில் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் செயல்படும் 'லேண்ட் மார்க் ஹவுசிங் புராஜக்ட்' என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் உதயகுமார். இதேபோல சென்னையில் செயல்படும் 'கே.எல்.பி. புராஜக்ட்' என்ற நிறுவனத்தின் இயக்குனர் சுனில் சேக்பாலியா, மனிஷ் பார்மர் ஆகியோர் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கார்த்திக் நேற்று முன்தினம் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கையொட்டி நேற்று மேற்கண்ட 2 கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலையில் இருந்து மாலை வரை இந்த சோதனை வேட்டை நீடித்தது. 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் 2 கட்டுமான நிறுவனங்களும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த 2 கட்டுமான நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜீவ்நாயுடு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் 2 கட்டுமான நிறுவனங்களும் பிரபல முக்கிய அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ரூ.50 கோடியே 86 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளன. லஞ்சம் கொடுத்தவர்கள் மீதும், வாங்கியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று ராஜீவ்நாயுடு வலியுறுத்தினார்.
அதன்பேரில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கண்ட 2 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக வருமான வரி அதிகாரிகளும் ஏற்கனவே மேற்கண்ட நிறுவனங்களில் சோதனை நடத்தி உள்ளனர். வழக்கில் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட 2 நிறுவனங்களும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மூடப்பட்டுள்ள பின்னி மில் நிறுவனத்துக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளன. அந்த இடத்தில் பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி தேவைப்பட்டது.
இதற்காகவே அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்ச பணத்தை வாரி வழங்கி உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 48 பேர் லஞ்ச பணம் வாங்கி பலன் அடைந்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோதனை முடிவடைந்த பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த லஞ்ச ஊழல் பெரியளவில் அரங்கேறி உள்ளது. இந்த நிலையில் அங்கு ஏற்கனவே பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.