மதுரவாயல் - துறைமுகம் இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையின் வரைகலை படங்கள்
|சென்னையில் மதுரவாயல் - துறைமுகம் இடையே அமையும் இரட்டையடுக்கு உயர்மட்ட சாலை வரைபடத்தை நிதின்கட்காரி வெளியிட்டார்.
ரூ.5,800 கோடியில் பாலம்
சென்னையில் மதுரவாயல்- துறைமுகம் இடையே அமைக்கப்பட உள்ள நான்குவழி இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலை திட்டம் ரூ.5,800 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இது 2024-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த சாலை சென்னை மக்களிடையே மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் புதிய வரைகலைப் படங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் கருத்தும் பதிவிட்டு உள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு புதிய பசுமை வழித்தட திட்டம் நடந்து வருகிறது. இதில் இரட்டை அடுக்கில் 4 வழிப்பாதை அடங்கும். சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை உயர்த்தப்பட்ட பாதையாக (மேம்பாலம்) இருக்கும்.
துறைமுக திறன் இரட்டிப்பாகும்
இந்த திட்டம் நிறைவடைந்தால், நெடுஞ்சாலையின் ஒரு அடுக்கில் உள்ளூர் போக்குவரத்தின் ஒரு பகுதியை பிரிப்பதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது துறைமுகத்தின் கையாளும் திறனை இரட்டிப்பாக்கும். துறைமுகத்தில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும். பயண நேரத்தையும் குறைக்கும்.
2040-ம் ஆண்டுக்குள் தற்போதைய நிலையிலிருந்து 2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் துறைமுக போக்குவரத்தை நிர்வகிப்பதற்கு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க வழி காட்டுதலின் கீழ், அசைக்க முடியாத அர்ப்பணிப்பாக உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.