சென்னை: மெட்ரோ ரெயில் கட்டுமான பணி காரணமாக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம்
|அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
மெட்ரோ ரெயில் கட்டுமான பணி காரணமாக சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இப்பணிகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது வருகின்ற 16.03.2024 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி துரைப்பாக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் நேராக சென்று துர்யா ஹோட்டல் முன் "யு" டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூருக்குச் செல்லலாம்.
அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அப்பல்லோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் மேலும் நேராக சென்று உலக வர்த்தக மையத்தின் முன் "யு" டர்ன் செய்து அப்பல்லோ சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி வேளச்சேரியை அடையலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.