< Back
மாநில செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்- அன்புமணி ராமதாஸ்
மாநில செய்திகள்

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்- அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
22 Dec 2023 8:21 AM GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.

சென்னை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. எனவே தொடர்ந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காலநிலை மாற்றம் என்பதே உலகத்தின் முதன்மை பிரச்சினை. இதுகுறித்து நான் பலகாலமாக பேசி வருகிறேன். மக்களை காப்பதற்காக அரசு திட்டமிட்டு, அதில் முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம், அது தேவை இல்லாத ஒன்று ஆகும். இந்த வானிலை ஆய்வு மையம் செய்கிற வேலையை 5ஆம் வகுப்பு மாணவனாலும் செய்ய முடியும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றுதான் எப்போதும் அறிவிக்கிறது. உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பிருந்த நிலையே தொடருகிறது என்று கூறினார்.

மேலும், இன்னும் பல்வேறு கிராமங்களுக்கு மீட்பு பணிகள் செய்யப்படவில்லை . எனவே நிவாரண பணிகளை வேகப்படுத்த வேண்டும். நிவாரணநிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்காமல் மாநில அரசு கேட்கும் நிதியை உடனடியாக வழங்க வேண்டும். பல்வேறு மக்களின் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் வெள்ளத்தில் அழிந்து விட்டன. எனவே அரசானது நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும், என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்