சென்னை ஐகோர்ட்டு உத்தரவு: தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் இன்று மறுஎண்ணிக்கை..!
|ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் ஓட்டுகள் மறு எண்ணிக்கை இன்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
தென்காசி,
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று பழனிநாடார் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின்போது குளறுபடிகள் நடந்ததாகவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தபால் ஓட்டுக்களை மட்டும் மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன் எதிரொலியாக இன்று 13-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டுகள் மறுஎண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் அதிகாரியாக உதவி கலெக்டர் லாவண்யா இருந்து இந்த வாக்கு எண்ணிக்கையை நடத்துகிறார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் மட்டும் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் காங்கிரஸ் சார்பில் பழனி நாடார் எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் சார்பில் மேலகரம் அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அரசு வக்கீலுமான கார்த்திக் குமார் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்கிறார்கள். மறுவாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.