< Back
மாநில செய்திகள்
சென்னை மின்சார ரெயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
மாநில செய்திகள்

சென்னை மின்சார ரெயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு - பயணிகள் கடும் அவதி

தினத்தந்தி
|
4 Jun 2024 9:50 PM GMT

திடீர் மின்தடையால் மின்சார ரெயில் சேவை ஒருமணி நேரம் பாதிப்படைந்தது.

சென்னை,

சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் அதிகப்படியான பயணிகள் பயணித்து வருகின்றனர். அன்றாட பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்னை வருபவர்களுக்கு குறைந்த செலவில், விரைவாக செல்ல இந்த வசதி பெரிதும் பயன்படுகிறது.

நேற்று காலை முதல் கடற்கரை- தாம்பரம் மற்றும் தாம்பரம்-கடற்கரை நோக்கி மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. இந்தநிலையில் மாலை 5.30 மணியளவில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதனால் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரெயில்கள் பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. ரெயில்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெகு நேரமாக நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி போன்ற ரெயில் நிலையங்களிலும் ரெயில் வெகுநேரம் வராததால் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சில பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் பயணித்தனர்.

தாம்பரம் - கடற்கரை இடையே இந்த பாதிப்பு ஏற்பட்டதால் கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில்களும் மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் மின்சார ரெயில்கள் ஆமை போல ஊர்ந்து ஒவ்வொரு ரெயில் நிலையமாக கடந்து சென்றது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மின்தடை பாதிப்பு சரி செய்யப்பட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக கடற்கரை நோக்கி புறப்பட்டு சென்றது. பின்னர் கடற்கரை-தாம்பரம் வழித்தடத்திலும் மின்சார ரெயில் சேவை சீரானது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, "நேற்று மாலை சென்னையில் அதிக காற்றுடன் மழை பெய்ததால் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள உயர்மின் அழுத்த கம்பிகளில் பிளாஸ்டிக் பைகள் சிக்கியதால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ரெயில்களை இயக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் செய்திகள்