சென்னை: பால்கனி இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு
|சென்னை வடபழனியில் பால்கனி இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்.
சென்னை,
சென்னை வடபழனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட என்.ஜி.ஓ. காலனி கணேஷ் அவென்யூ பகுதியில் சுமார் 25 வருட பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் விஜயலட்சுமி என்ற பெண் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் விஜயலட்சுமி பூ வியாபாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பால்கனியில் இருந்தவாறு பூ வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் அப்போது திடீரென பால்கனி இடிந்து விழுந்தது. இதில் கீழே இருந்த பூ வியாபாரி கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பால்கனியில் இருந்து விழுந்த விஜயலட்சுமிக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபழனி போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.