சென்னை: இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்து வயதான தம்பதி பலி
|சென்னை கோடம்பாக்கத்தில் இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்து வயதான தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
போரூர்,
சென்னை, கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி ( வயது 78) வருமானவரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி (76 ) தடய அறிவியல் துறை துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
6 வீடுகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கீழ் தளத்தில் வயதான தம்பதிகள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். தினசரி இரவு 10.30 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பின் "கேட்டை" மூர்த்தி மனைவியுடன் சென்று பூட்டுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு மூர்த்தி, பானுமதி இருவரும் கேட்டை பூட்ட சென்றனர்.
கேட்டில் கை வைத்தபோது பானுமதி மீது மின்சாரம் பாய்ந்து அவர் அலறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது மூர்த்தி மீதும் மின்சாரம் பாய்ந்தது இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த அசோக் நகர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரும்புத்தூணில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கிலிருந்து ஏற்பட்ட மின்கசிவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. வயதான தம்பதிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.