< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் ஆய்வு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் ஆய்வு

தினத்தந்தி
|
28 July 2023 11:21 AM GMT

அம்ரித் பாரத் திட்டத்தில் நவீன மயமாக்கப்பட உள்ள திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் எர்ரா ஆய்வு மேற்கொண்டார்.

அம்ரித் பாரத் திட்டத்தில்

இந்திய ரெயில்வே துறையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் உள்ள சில முக்கிய ரெயில் நிலையங்களை தரம் உயர்த்தி அந்த ரெயில் நிலையங்களை பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன மயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்த வகையில் இந்தியா முழுவதும் 1,275 ரெயில் நிலையங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 73 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னை கோட்டத்தில் மட்டும் தாம்பரம், கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட 14 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

14 ரெயில் நிலையங்கள்

தேர்வு செய்யப்பட்ட இந்த 14 ரெயில் நிலையங்களிலும் பொதுமக்கள் வசதிக்கேற்ப வணிக வளாகங்கள், எலக்ட்ரானிக் தகவல் பலகை, ரெயில் பயணியர் ஓய்வு அறை, வாகன நிறுத்துமிடம், லிப்ட் வசதி, நடைபாலம், எஸ்கலேட்டர் வசதி, பயணச்சீட்டு அலுவலகம் உள்பட ரெயில் நிலையங்களை தரம் உயர்த்தி நவீன மயமாக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் நேற்று காலை சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் எர்ரா சென்னையில் இருந்து அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

நேற்று காலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் வந்த அவர் ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டி திறக்கப்படாமல் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை மற்றும் ரெயில் பயணிகளுக்காக புதிய நடைபாதை, பயணிச்சிட்டு அலுவலகம், எஸ்கலேட்டர், நடைமேடை, உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள், பயணிகளின் வசதிக்காக லிப்ட் வசதி அமைப்பது உள்ளிட்டவற்றை குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். இந்த ஆய்வின்போது ரெயில்வே உயர் அதிகாரிகள், இன்ஜினீயர்கள், உள்ளிட்ட குழுவினர் உடன் வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்