< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
7 Feb 2024 12:00 PM GMT

முன்ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பா.ஜனதா மாவட்ட நிர்வாகி ஆவார். இவரது சகோதரி தேவி கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த 21-ந் தேதி அன்று இரவு, நான் எனது சகோதரி ஆண்டாள் வீட்டில் இருந்தேன். அப்போது, பா.ஜனதா மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் தூண்டுதலின்பேரில், அவரது கார் டிரைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர், எங்கள் வீட்டில் ரகளையில் ஈடுபட்டனர். அதில் எனது தலையில் ரத்த காயம் ஏற்பட்டது.

கடந்த 19-ந் தேதி, பிரதமர் மோடி சென்னை வந்தபோது, ஆட்கள் அழைத்து செல்வது தொடர்பாக எனது சகோதரி ஆண்டாளுக்கும், நிவேதா என்ற பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. அதையொட்டிதான், அமர் பிரசாத் ரெட்டியின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த புகார் அடிப்படையில், அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் டிரைவர் ஸ்ரீதர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியின் கார் டிரைவர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவானதால் அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், அந்த மனு தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் 10 நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அப்படி கையெழுத்து போடாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்