பாலத்தில் கார் மோதி சென்னை தம்பதி பலி: வங்கி ஊழியர் உள்பட 2 பேர் படுகாயம்
|பாலத்தின் மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி பலியாகினர். வங்கி ஊழியர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை,
சென்னை அடையார் காந்தி நகரை சேர்ந்தவர் பிஜேஸ்வரன் மகன் பிஸ்வாராஜன் (வயது 38). வங்கி ஊழியர். இவர், தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிஜய்குமார் சரண் (75), இவரது மனைவி மீரா சரண் (67).
பிஸ்வாராஜன் வேலை பார்க்கும் வங்கியில் வேலை பார்க்கும் சுஜித் சுதாகரன் மனைவி அஞ்சனா (32). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் ஒரு காரில் கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தனர். காரை பிஸ்வாராஜன் ஓட்டினார்.
தம்பதி பலி
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்து விராலூர் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் மீரா சரண் மற்றும் அவரது கணவர் பிஜய்குமார் சரண் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். பிஸ்வாராஜன் மற்றும் அஞ்சனா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.