சென்னை
சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மன்றக்கூட்டம்
|சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு மாதாந்திர மன்றக்கூட்டம் நடைபெற்றது. மறைந்த தி.மு.க.கவுன்சிலர் ஷீபா வாசுவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது
சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க, ஒவ்வொரு மாதமும் மாமன்ற கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நேற்று நடந்தது. கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி நடந்த மாமன்றக் கூட்டத்தின் போது, ம.தி.மு.க. உறுப்பினர் ஜீவன், மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கூட்டத்திலேயே கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேயர் பிரியா ராஜன், 'இனி நடைபெறும் மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்' என அறிவித்தார்.
அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கான மாமன்ற கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. வழக்கமாக சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் திருக்குறளுடன் தொடங்கும் நிலையில், முதன் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.
இரங்கல் தீர்மானம்
பின்னர், கூட்டத்தில் கடந்த 16-ந்தேதி மறைந்த 122-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஷீபா வாசு மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை மேயர் பிரியா ராஜன் வாசித்தார். அவரை தொடர்ந்து, தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி மாமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தீர்மானம் வாசித்தனர்.
இரங்கல் தீர்மானத்தின் போது பேசிய 42-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாமன்ற உறுப்பினர் ரேணுகா, சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பணிக்காலத்தில் இறந்தால் அவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், அவரின் குடும்பத்துக்கு மாதம் ரூ.1,000, 5 ஆண்டுகளுக்கு பின்னர் மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. ஆனால், மாமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் இல்லை. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்பார்க்கிறோம்' என்றார்.
மேயர் பிரியா ராஜன், 'மாமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருக்கும் போது உயிரிழந்தால் மாநகராட்சி சார்பில் அவரது குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்றார்.
ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்
துணை மேயர் மகேஷ் குமார், 'மாமன்ற உறுப்பினர்கள் பதவி காலத்தில் இருக்கும்போது உயிரிழந்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
மேயர் பிரியா ராஜன், 'துணை மேயர் தெரிவித்துள்ளது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்' என்று உறுதி அளித்தார். இதைத்தொடந்து, ஷீபா வாசுவின் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மார்ச்-2ந்தேதிக்கு (நாளை) மாமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவித்து மேயர் பிரியா ராஜன் கூட்டத்தை ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் ஒலித்து நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.