சென்னை
மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை கல்லூரி மாணவர் பலி
|மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை கல்லூரி மாணவர் பலியானார்.
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அடைக்கலம். இவருடைய மகன் நீதிதேவன் (வயது 19). இவர், சென்னை மாநில கல்லூரியில் 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார்.
நேற்று நீதிதேவன், மின்சார ரெயிலில் வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு-செவ்வாப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வரும்போது ரெயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த நீதிதேவன், திடீரென ஓடும் ரெயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.
இதில் அவரது கால்கள் சிதைந்து படுகாயம் அடைந்த அவரை, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நீதிதேவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.