சென்னை
அதிக கமிஷன் தருவதாக ஏமாற்றி சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த நைஜீரியர்கள் கைது
|ஆயுர்வேத தொழிலில் முதலீடு செய்தால் அதிக கமிஷன் தருவதாக கூறி சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொளத்தூரை சேர்ந்தவர்
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், 'நைஜீரிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் ' LINKEDIN என்ற இணையதள முகவரி வாயிலாக என்னை தொடர்புக்கொண்டார்.
ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்வதற்கு ஒரு வணிக கட்டமைப்பு உருவாக்கி உள்ளோம். இதில் மூலப் பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை முதலீடு செய்தால் கமிஷன் தொகை தருவதாகவும் கூறினார். இதனை உண்மை என்று நம்பி அவர்கள் கூறிய 2 வங்கி கணக்குகளில் ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை 8 பரிவர்த்தனைகள் மூலம் முதலீடு செய்தேன். ஆனால் அந்த நைஜீரியர் சொன்னப்படி கமிஷன் தொகை தரவில்லை. நான் முதலீடு செய்த பணத்தையும் மோசடி செய்துவிட்டார்.' என்று கூறியிருந்தார்.
மும்பையில் கைது
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்தினர். இதில் மும்பை கார்கர் பகுதியில் தங்கிருந்து நைஜீரியர் நாட்டு கும்பல் இது போன்ற மோசடி செயலை அரங்கேற்றி வருவது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர். அவர்கள் தங்கியிருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
பின்னர் மோசடி கும்பலை சேர்ந்த நைஜீரியர்கள் ஒகோரிகாட்ஸ்வில் சைனாசா (வயது 32), உச்சே ஜான் இமேகா (47), காட்வின் இமானுவேல் (32), எபோசி உச்சென்னா ஸ்டான்லி (32) ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் குறிப்பிட்ட இந்த இணையதளம் மூலம் இதே பாணியில் பலரிடம் மோசடியை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
இந்த நிலையில் இணையதளங்கள் மூலம் வியாபாரம் தொடங்கும் முன்பு தீர விசாரிக்க வேண்டும். ஆசை வார்த்தைகளை நம்பி அறிமுகம் இல்லாத நபர்களுக்கு பணம் அனுப்ப கூடாது என்று சென்னை போலீஸ்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.