< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் 6 அடுக்கு வாகன நிறுத்துமிடம் ; ஆகஸ்டு மாதம் திறப்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் 6 அடுக்கு வாகன நிறுத்துமிடம் ; ஆகஸ்டு மாதம் திறப்பு

தினத்தந்தி
|
10 July 2022 2:05 PM IST

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் 6 அடுக்குமாடிகள் கொண்ட வாகன நிறுத்துமிடம் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகன நிறுத்துமிடம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெறும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் விமான நிறுத்துமிடங்கள் அதிகரிக்கப்படுவதுடன், புறப்படும் வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன.

அதேபோல் சென்னை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்த 6 அடுக்கு மாடிகள் கொண்ட வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டுமான பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. ரூ.250 கோடியில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவிலான இந்த வாகன நிறுத்துமிடத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தும் வசதி உள்ளது.

மேலும் பார்வையாளர்களுக்காக சில்லறை விற்பனைக்கடைகள் உள்ளிட்ட வணிக வளாகம், உணவகங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடம் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சார்ஜ் போடும் வசதி

மேலும் சென்னை விமான நிலையம் வரும் பயணிகள், பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையின் தொடர்ச்சியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளன.

மேற்குப்புற வாகன நிறுத்துமிடத்தில் 3 மின்சார வாகன சாா்ஜிங் முனையங்களும், கிழக்குப்புறத்தில் 2 சாா்ஜிங் முனையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக சாா்ஜிங் நிலைய வசதி காரணமாக வாகன நிறுத்துமிடம், வாகனச் சந்தையின் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும் எதிர்கால தேவைகளுக்கேற்ப கூடுதல் சாா்ஜிங்க் முனையங்களும் அமைக்கப்பட உள்ளது.

முன்பதிவு வசதி

வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தும் பார்வையாளர்கள் அதற்கான பிரத்யேக செயலியில் உரிய கட்டணம் செலுத்தி மின்சார வாகனங்களுக்கான சாா்ஜிங்க் முனையங்களை முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்படுகிறது.

பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் செயல்பட தொடங்கியதும் தற்போது தரைத்தளத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அழகுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் நகர்ப்புற பகுதி அழகுற மிளிரும் என சென்னை விமான நிலைய ஆணையகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்