< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் 7 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைப்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் 7 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைப்பு

தினத்தந்தி
|
22 Sep 2022 9:09 AM GMT

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் புதிதாக 7 இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களில் பயணிகள் ஏற, இறங்க முடியும்.

சென்னை விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம், பழைய விமான நிலையம் ஆகிய இடங்களில் 110 விமானங்கள் நிற்கும் நிறுத்த மேடைகள் அமைந்துள்ளன. அதில் 1-ல் இருந்து 10 வரையில் பழைய விமான நிலையத்தில் அமைந்துள்ளது. இதில் முக்கிய பிரமுகர்களின் தனி விமானங்கள், சரக்கு விமானங்கள் நிற்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

மீதமுள்ள 100 நிறுத்த மேடைகள், சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் முதல் ஓடு பாதை, 2-வது ஓடு பாதைகளில் அமைந்து உள்ளன. இதில் 19-வது நிறுத்த மேடையில் இருந்து 35-வது நிறுத்த மேடை வரையிலான 17 நிறுத்த மேடைகளில் நிற்கும் விமானங்களில் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் 'ஏரோ பிரிட்ஜ்' வசதிகள் உள்ளன.

மற்ற நிறுத்த மேடைகள் திறந்த வெளி நிறுத்த மேடைகளாக உள்ளன. அந்த திறந்த வெளி நிறுத்த மேடைகளில் நிற்கும் விமானங்களில் பயணிகள் ஏறி, இறங்க 'லேடா்' எனப்படும் நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தப்படுவதால் மழை காலங்களில் பயணிகள் விமானங்களில் ஏறுவது, இறங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்கவும் சிரமப்படுகின்றனா். இதனால் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதங்கள் ஏற்படுகின்றன.

நிரந்தர இணைப்பு பாலங்கள்

எனவே சென்னை விமான நிலையத்தில் கூடுதல் 'ஏரோ பிரிட்ஜ்கள்' அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது புதிதாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அதிநவீன விமான முனையத்தில் 7 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டிடத்தில் 3-ம், 2-வது கட்டிடத்தில் 4-ம் என மொத்தம் 7 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.

இணைப்பு பாலங்கள் மூலம் பயணிகள் ஏறி, இறங்கும்போது அது இணைக்கப்பட்ட ஒரு விமானத்தில் தான் பயணிகள் ஏறி இறங்க முடியும். ஆனால் தற்போது புதிதாக அமைக்கப்படும் நிரந்த இணைப்பு பாலங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் பயணிகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது.

இந்த புதிய இணைப்பு பாலத்தில் ஒரே நேரத்தில் அதிகமான பயணிகள் விமானங்களில் ஏறி, இறங்க முடியும். இதனால் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் செய்திகள்