< Back
மாநில செய்திகள்
விண்டோஸ் பாதிப்புகள் குறித்து சென்னை விமான நிலையம் விளக்கம்
மாநில செய்திகள்

விண்டோஸ் பாதிப்புகள் குறித்து சென்னை விமான நிலையம் விளக்கம்

தினத்தந்தி
|
20 July 2024 1:37 PM GMT

விண்டோஸ் பிரச்சினையால் விமான சேவைகள் பாதிப்பை சந்தித்தது தொடர்பாக சென்னை விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

விண்டோஸ் பாதிப்புகள் தொடர்பாக சென்னை விமான நிலைய விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனின் கிளவுட் சேவைகளில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் இடையூறு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமான ரத்து மற்றும் தாமதங்களுக்கு வழிவகுத்தன. 10:40 மணிக்கு தொடங்கிய இந்த செயலிழப்பு, விமான அட்டவணைகள், பயணிகள் செக்-இன்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை கடுமையாக பாதித்தது.

இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா போன்ற விமான நிறுவனங்கள் கணிசமான செயல்பாட்டு இடையூறுகளை சந்தித்தன. பல விமானங்கள் திட்டமிட்டபடி தொடர முடியவில்லை. இதன் விளைவாக ஏராளமான விமான ரத்து மற்றும் தாமதங்கள் ஏற்பட்டன.

இருபத்தி எழு உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 158 உள்நாட்டு விமானங்களில் 66 விமானங்களும், 34 சர்வதேச விமானங்களில் 8 விமானங்களும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதத்தை சந்தித்தன. இடையூறுகள் இருந்தபோதிலும் பயணிகளுக்கு அவர்களின் பயணத்தை எளிதாக்க மெனுவல் போர்டிங் பாஸ் வழங்கப்பட்டன.

மறு முன்பதிவு மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான தகவல்களுக்கு, பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்படி நிகழ்நேர தகவல்களுக்கு தயவுகூர்ந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சமூக ஊடக பக்கத்தினையும், அந்தந்த விமான நிறுவனங்களையும் கண்காணிக்கவும். விமான நிலையத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தினர், உங்களது கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவ தயாராக உள்ளனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்