சென்னை: கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலி - 9 பேர் படுகாயம்
|எண்ணூர் கடற்கரை சாலையில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
திருவொற்றியூர்,
சென்னை எண்ணூர் காட்டு பள்ளி துறைமுகத்தில் எல். என். டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 9 பேர் ஈச்சர் வேனில் சென்னை துறைமுகம் 5 வது நுழைவுவாயில் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
வேன் திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலை கே. வி. கே குப்பம் அருகே கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் வேனில் இருந்த டிரைவர் சந்துரு, வெங்கட், சுமன், டில்லி, பிரபு, முத்து ஆகிய 9 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து அறிந்த திருவொற்றியூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காட்டன் ரோடு பகுதியைச் சேர்ந்த எரோலின்ஸ் ஸ்டீபன் (வயது 35) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.