மழைநீர் வடிகால்வாய் பணிக்கு வீட்டு வாசலில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர்...!
|சென்னையில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தவறிவிழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
ஆலந்தூர்,
சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் 175 வது வார்டுக்குட்பட்ட ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு, சிட்டி லிங்க் ரோடு ஆகிய சாலைகளில் பழைய மழைநீர் வடிகால் உடைக்கப்பட்டு புதிய வடிகால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக கக்கன் நகர் மெயின் ரோட்டில் வடிகால்வாய் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
ஆதம்பாக்கம் கக்கன் நகர் மெயின் ரோடு சேர்ந்தவர் வாசுதேவன்(33). தனியார் கம்பியூட்டர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவருடைய வீட்டின் வாசலில் பழைய மழைநீர் வடிகால்வாய் உடைக்கப்பட்டு புதிய வடிகால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் பழைய மழை நீர் வடிகால்வாய் மூடப்படாமல் திறந்த வெளியில் விடப்பட்டிருந்தது. வாசுதேவன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டுக்குள் எடுத்துச் செல்லும் போது நிலை தடுமாறி கால்வாயில் தலைக்கு குப்புற விழுந்தார்.
இதில் அவருக்கு தலை மற்றும் வலது கை தோள்பட்டை மற்றும் வலது தொடையில் காயம் ஏற்பட்டது. . இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் வாசுதேவனை வடிகால்வாயில் இருந்து தூக்கி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.