சென்னை: மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு
|மெட்ரோ ரெயில் நிலையம் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை,
கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே அபிநயா என்ற கல்லூரி மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் அந்த மாணவியின் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். இந்த சம்பவத்தில் கழுத்தில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் போலீசார், கொள்ளையரை தேடி வருகின்றனர்.
இதேபோல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் நிலைகுலைந்து விழுந்த அந்த இளைஞர்களிடம் இருந்து ஒன்றரை சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். மேலும் சென்னை அண்ணாநகரில் மூதாட்டியை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 6 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.