< Back
மாநில செய்திகள்
சென்னை: வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயம்
மாநில செய்திகள்

சென்னை: வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயம்

தினத்தந்தி
|
6 May 2024 8:25 AM IST

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றி வருபவர் ரகு. இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்ஷாவுடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ரகு தனது உறவினர் ஒருவர் இறந்ததால் விழுப்புரம் சென்றுள்ளார். இதனிடையே நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார். அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை இரு நாய்களும் கடித்துள்ளன. குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் நாய்கள் கடித்துள்ளன.

நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, நாய்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு போலீசார் புகழேந்தியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தைக்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக புகழேந்தி கூறியதையடுத்து சிறுமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரம் விளக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்