செங்கல்பட்டில் மதுப்பிரியரை தாக்கிய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் - மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவு
|எஸ்.ஐ. ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்ப்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்க வந்த போது, அவரிடம் கடை ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நபர் டாஸ்மாக் கடை வாசலில் நின்றபடி அங்கிருந்தவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கு வந்த செங்கல்பட்டு நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜா, அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு கூறியதோடு அவரை அடித்து விரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. ராஜா மீது காவல்துறை தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கவும் ராஜாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.