செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது!
|சரக்கு ரெயிலின் 9 பெட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு,
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரெயில், நேற்று இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகில் (பழைய தாலுகா அலுவலகம் ரெயில்வே கேட் அருகே) வந்தபோது, திடீரென்று தடம் புரண்டது. ரெயிலின் 9 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி தரையில் சரிந்து நின்றது.
இதையடுத்து சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டு, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைத்து ஜாக்கி கருவிகள் உதவியுடன் ரெயிலின் சக்கரங்களை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சரக்கு ரெயிலின் 9 பெட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரெயில் சேவை சுமார் 9 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.