மருத்துவமனையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புகிறார்..?
|காவேரி மருத்துவமனையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்
தொடர்ந்து காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிற்பகல் காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
நாளை தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் , முதல்-அமைச்சரின் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது.