< Back
மாநில செய்திகள்
இரும்பு கடைக்காரரிடம் ரூ.60 ஆயிரம் நூதன மோசடி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

இரும்பு கடைக்காரரிடம் ரூ.60 ஆயிரம் நூதன மோசடி

தினத்தந்தி
|
19 May 2022 11:10 AM GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நபரிடம் ஏ.டி.எம். கார்டு விவரங்களை துல்லியமாக கூறி ரூ.60 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நபரிடம் ஏ.டி.எம். கார்டு விவரங்களை துல்லியமாக கூறி ரூ.60 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இரும்புக்கடை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி திருவள்ளுவர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி மகன் பாண்டிய நாதன் (வயது50). இவர் பழைய இரும்பு கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது தொழில் விசயமாக வரவு செலவு செய்வதற்காக பரமக்குடியில் உள்ள ஒரு பிரபல தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி பாண்டியநாதனை செல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் வங்கி மேலாளர் விஜயன் பேசுவதாக கூறியுள்ளார். மேலும், பாண்டியநாதனிடம் அவரின் பெயர், வங்கி கணக்கு எண், ஏடிஎம். கார்டு 16 இலக்க எண், 3 இலக்க எண், காலாவதி தேதி ஆகியவற்றை தெளிவாக கூறி சரியா என்று கேட்டுள்ளார்.

விவரம்

மோசடி நபர்கள் என்றால் தம்மிடம்தானே கேட்பார்கள் இவர் தனது அனைத்து விவரங்களையும் சரியாக சொல்கிறாரே என்று ஆச்சர்யப்பட்ட பாண்டியநாதனிடம் மர்ம நபர் உங்களின் ஏ.டி.எம். கார்டு இனி செல்லாது என்றும் மோசடிகளை தவிர்க்க தாங்கள் வங்கி சார்பில் புகைப்படத்துடன் கூடிய ஏ.டி.எம். கார்டு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புகைப்படத்துடன் கூடிய ஏ.டி.எம். கார்டினை தபாலில் அனுப்ப இருப்பதால் புதிய ஏ.டி.எம். கார்டு விண்ணப்பத்தில் ஒப்புதல் பெற தங்களுக்கு வரும் ரகசிய எண்ணை தனக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளார். தனது படத்துடன் கூடிய ஏ.டி.எம். கார்டா என்று மகிழ்ச்சி அடைந்த பாண்டியநாதன் அவருக்கு வந்த ரகசிய எண்களை அடுத்தடுத்து கூறியுள்ளார்.

அதிர்ச்சி

இதன்பின்னர் உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறி நன்றி தெரிவித்துவிட்டு மர்ம நபர் அழைப்பை துண்டித்துவிட்டார். அடுத்தடுத்து ரகசிய எண்ணை ஏன் கேட்டார் என்று தாமதமாக சந்தேகப்பட்ட பாண்டியநாதன் பரமக்குடி ஓட்டபாலத்தில் உள்ள மேற்கண்ட வங்கி கிளைக்கு சென்று தனது வங்கி கணக்கினை சரிபார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.

அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரத்து 155 பணத்தினை மர்ம நபர் தன் மூலமாகவே எடுத்துள்ளது தெரிந்தது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த பாண்டியநாதன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதில் மோசடி நபர்களே கார்டு விவரம், காலாவதி தேதி, வங்கி எண், ரகசிய எண் என அனைத்தையும் அவர்களே தெரிவித்து ஓ.டி.பி. எனப்படும் ரகசிய எண்ணை மட்டும் சொன்னால்போதும் மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்ற நிலையில் மோசடியில் ஈடுபட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கை

இதன்மூலம் வங்கியின் விவரங்கள் வெளியில் கசிந்துள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏனெனில் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய 3 இலக்க எண், காலாவதி தேதி என அனைத்தையும் வடமாநிலக்காரர் ஒருவர் தெளிவாக கூறுகிறார் என்றால் வங்கி விவரங்கள் வெளியாகி உள்ளதாகவே தோன்றுகிறது.

எனவே, சைபர் கிரைம் போலீசார் மோசடியை தடுக்கும் முன் வங்கி விவரங்கள் வெளியில் சென்றுள்ளதா வங்கி கணக்கு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்து எந்தெந்த வங்கி விவரங்கள் வெளியாகி உள்ளது என்பதை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்