ஈரோடு
கடம்பூர் அருகே வனப்பகுதி ரோட்டை கடந்து சென்ற சிறுத்தை புலி; வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
|கடம்பூர் அருகே வனப்பகுதி ரோட்டை கடந்து சென்ற சிறுத்தை புலி; வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
டி.என்.பாளையம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கே.என்.பாளையத்தில் இருந்து கடம்பூர் வனப்பகுதி வழியாக சாலை செல்கிறது. இந்த சாலையில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் அருகே நேற்று முன்தினம் இரவு ஒருவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிறுத்தை புலி ஒன்று ரோட்டின் ஒரு பகுதியில் இருந்து கடந்து மற்றொரு பகுதிக்கு சென்று கொண்டிருந்ததை பார்த்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது வாகனத்தை அவர் சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார். சிறுத்தை புலி ரோட்டை கடந்து சென்றதும் அவர் அங்கிருந்து சென்றார். இதற்கிடையே அவர் சிறுத்தை புலியை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர், கே.என்.பாளையத்தில் இருந்து கடம்பூர் செல்லும் வனப்பகுதி சாலையில் சிறுத்தை புலி நடமாட்டம் காணப்படுகிறது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.