ஈரோடு
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
|தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்தது. அதை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தாளவாடி
தாளவாடி அருகே கரும்பு தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்தது. அதை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தாளவாடி வனச்சரகம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் குறிப்பாக யானைகள் காட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.
இதேபோல் சிறுத்தைகளும் அவ்வப்போது காட்டைவிட்டு வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 45). விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் கரும்பு மற்றும் மஞ்சள் பயிரிட்டுள்ளார்.
சிறுத்தை புகுந்தது
இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ சலசலவென சத்தம் கேட்டது. இதனால் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தார். அப்போது சிறுத்தை ஒன்று கரும்பு தோட்டத்துக்குள் நுழைவது தெரிந்தது. இதனால் பயந்துபோன அவர் சத்தம் எழுப்பாமல் தோட்டத்தில் இருந்து வெளியே ஓடிவந்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். முதலில் தோட்டத்தில் பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தார்கள். அப்போது தோட்டத்துக்குள் புகுந்தது சிறுத்தைதான் என்பது உறுதியானது.
கூண்டு வைக்க கோரிக்கை
இதையடுத்து வனத்துறையினர் தற்காப்பு உபகரணங்களுடன் தோட்டத்துக்குள் நுழைந்து தேடினார்கள். சுமார் 3 மணி நேரம் தேடியும் சிறுத்தை சிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்கள். அதனால் சிறுத்தை வேட்டையாடுவதற்குள் அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதேபோல் சிறுத்ைத பிடிபடும் வரை தோட்டங்களுக்குள் யாரும் தனியாக செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.