பாலாற்றில் மீண்டும் தடுப்பணை கட்ட ஆந்திரா முயற்சி.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
|தமிழகத்தை பாதிக்கும் தடுப்பணை திட்டங்களை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பிஎஸ் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கடந்த காலங்களில் தடுப்பணைகளை கட்டி முடித்துள்ளார்.
மைசூர் சமஸ்தானம் மற்றும் சென்னை மாகாணத்திற்குமான ஒப்பந்தப்படியும், 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர் உடன்பாட்டின்படியும் பாலாற்று பாசனம் நமக்கான அடிப்படை உரிமையாகும். சர்வதேச நதிநீர் கோட்பாட்டின்படி கடைமடை பாசனத்திற்குத்தான் முன்னுரிமை உடையதாகும். இதை எதையும் மதிக்காது குறுகிய அரசியல் பதவி வேட்கையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுவதும்.. பின் இதனை உயர்த்தி கட்டுமாணம் செய்வதும் ஆளும் ஆந்திரா மாநில அரசால் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
இப்படி 22 தடுப்பணைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன. இதன் மீது ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இரு வழக்குகள் தாக்கல் செய்து விசாரணையில் உள்ள நிலையில், மீண்டும் ஆந்திர முதல்வர் மீறி உள்ளார். சட்ட வழிமுறை மாண்புகளை காக்க வேண்டிய ஒன்றிய அரசும் வேடிக்கை பார்க்கிறது.
இந்திய இறையாண்மை, ஒருமைப்பாட்டை காத்திடுவேன், அரசியல் சட்டநெறி முறைகளின்படி நடப்பேன் என்று உறுதி அளித்து பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சரே இப்படி மீறுவது தேசிய ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிப்பதாகும்.
இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டிப்பதுடன், தமிழகத்தை பாதிக்கும் இந்த திட்டங்களை ஆந்திர அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வழக்குகளை துரிதப்படுத்தி விசாரணைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தடுப்பனைகளுக்கு எதிராக தடை ஆணை பெற்றிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.