< Back
மாநில செய்திகள்
கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்... அடுத்து நடந்த கோர சம்பவம்.. நாமக்கல்லில் பரபரப்பு
மாநில செய்திகள்

கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்... அடுத்து நடந்த கோர சம்பவம்.. நாமக்கல்லில் பரபரப்பு

தினத்தந்தி
|
6 May 2024 10:31 AM IST

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை, மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே நெ.3 கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது46). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2-ந் தேதி ஆயிபாளையம் ரெயில் தண்டவாளம் அருகே பழனிவேல் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த வெண்ணந்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து இறந்த பழனிவேலின் அக்காள் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இறந்த பழனிவேலின் மனைவி செல்வி பயன்படுத்திய செல்போன் எண்ணிற்கு சமீப நாட்களாக வந்த மர்ம அழைப்புகள் போன்றவற்றையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே போலீசார் செல்வியிடம் தீவிரமாக நடத்திய விசாரணையில், செல்வி, அவருடைய கள்ளக்காதலன் நெ.3 கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி (49), சேலம் பகுதியை சேர்ந்த கூலிப்படை ரவி ஆகியோருடன் சேர்ந்து பழனிவேலை கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செல்வி, ரவி ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட பழனிவேலின் மனைவி செல்வி போலீசாரிடம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனது கணவருக்கும், கள்ளக்காதலனான ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பு இருந்தது. எங்கள் வீடு ஒரே வீதியில் இருப்பதால் கந்தசாமி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். இதற்கிடையே எனக்கும், கந்தசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி நெருங்கி பழகி வந்தோம். எங்களது கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரிந்ததால் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் நானும், கள்ளக்காதலன் கந்தசாமியும் எனது கணவர் பழனிவேலை தீர்த்துக்கட்டினால் தான் நமது உறவு நீடிக்கும் என்று கருதினோம்.

இதற்கிடையே கந்தசாமிக்கும், ரவிக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நானும், கள்ளக்காதலன் கந்தசாமியும், சேலத்தை சேர்ந்த கூலிப்படை ரவியிடம் தகவலை தெரிவித்து 3 பேரும் சேர்ந்து பழனிவேலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். சம்பவத்தன்று பழனிவேலுக்கு அதிகளவு மது கொடுத்துவிட்டு பின்னர் ஆயிபாளையம் ரெயில் தண்டவாளம் அருகே ரவி மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனிவேலை குத்திக்கொலை செய்தோம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் தலைமறைவான செல்வியின் கள்ளக்காதலன் நெ. 3 கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்காதல் மோகம் நெஞ்சை கல்லாக்கியதால் கட்டிய கணவரையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்