< Back
மாநில செய்திகள்
வாலிபருடன் மனைவிக்கு கள்ளக்காதல்.. கண்டித்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்
மாநில செய்திகள்

வாலிபருடன் மனைவிக்கு கள்ளக்காதல்.. கண்டித்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்

தினத்தந்தி
|
10 May 2024 11:19 AM IST

கள்ளக்காதல் விவகாரம் குறித்து 2-வது மனைவியிடம் கணவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுங்கச்சாவடி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). தையல் தொழிலாளியான இவர், சட்டைகளுக்கு காஜா பட்டன் தைக்கும் வேலை செய்து வந்தார். அவருடைய முதல் மனைவி கார்த்திகா (46). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்திரைசெல்வி (36) என்பவரை சரவணன் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மோகன், சண்முகநாதன், சந்தோஷ் என்ற 3 மகன்கள் உள்ளனர். இரண்டு மனைவிகளுக்கும் தனித்தனியே வீடு பிடித்து வைத்து எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் சரவணன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் 2-வது மனைவி சித்திரை செல்விக்கும், அதே பகுதியை சேர்ந்த சலீம் (24) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சித்திரைசெல்வி வசிக்கிற மாடி வீட்டின் கீழ் உள்ள டீக்கடையில் சலீம் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது. இதனையறிந்த சரவணன், சித்திரைசெல்வியை கண்டித்தார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரை செல்வியும், சலீமும் வீட்டில் தனிமையில் இருந்ததை சரவணன் பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சலீம் அங்கிருந்து ஓடி விட்டார். இதனையடுத்து சித்திரை செல்வியை சரவணன் கடுமையாக கண்டித்தார். அதன்பிறகு சரவணன் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சரவணனை தீர்த்து கட்ட சித்திரை செல்வி முடிவு செய்தார். இது தொடர்பாக சலீமிடம் அவர் தெரிவித்தார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.

தினமும் காலையில் முதல் மனைவி கார்த்திகா வீட்டிலும், மதியம் 2-வது மனைவி சித்திரைசெல்வி வீட்டிலும் சரவணன் உணவு சாப்பிடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மதியம், சித்திரைசெல்வி வீட்டுக்கு உணவு சாப்பிட சரவணன் சென்றார்.

அப்போது கள்ளக்காதல் விவகாரம் குறித்து சித்திரை செல்வியிடம் அவர் மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரைசெல்வி, தனது கள்ளக்காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அடுத்த சில நிமிடங்களில் சலீம் அங்கு வந்தார்.

இதை தொடர்ந்து சித்திரைசெல்வியும், சலீமும் சேர்ந்து சரவணனை தாக்கி கீழே தள்ளி விட்டனர். அதன்பிறகு அவரது கால்களை கயிற்றால் கட்டினர். இதனையடுத்து சரவணனின் முகத்தை தலையணையால் அமுக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு தப்பி சென்றனர் .

2-வது மனைவி வீட்டுக்கு சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் வராததால், அவரது செல்போன் எண்ணுக்கு முதல் மனைவி கார்த்திகா தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சித்திரைசெல்வியின் வீட்டுக்கு கார்த்திகா சென்றார். அப்போது வீடு பூட்டிக்கிடந்தது.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கார்த்திகா உள்ளே சென்றார். அங்கு கட்டிலில் சரவணன் பிணமாக கிடந்தார். இதனைக்கண்டு கார்த்திகா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதற்கிடையே சந்தேகத்தின்பேரில் சித்திரைசெல்வியையும், சலீமையும் பிடித்து தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணனை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. சித்திரைசெல்வியும், சலீமும் கைது செய்யப்பட்டனர்.

கைதான சித்திரைசெல்வி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நான் குடியிருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் உள்ள டீக்கடையில் சலீம் வேலை செய்தார். அடிக்கடி அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்தோம்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனிமையில் இருந்ததை எனது கணவர் பார்த்து விட்டார். அதன்பிறகு இதுதொடர்பாக என்னிடம் கேட்டு அடிக்கடி தகராறு செய்தார். இதனால் சலீமுடன் சேர்ந்து கொலை செய்தேன். வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக இருந்த எங்களை விசாரணை நடத்தி போலீசார் கைது செய்து விட்டனர் என்று வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரையே 2-வது மனைவி கொலை செய்த சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்