ராமநாதபுரம்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
|உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆர்.எஸ்.மங்கலம்,
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வெயிலுகந்த விநாயகர் கோவில்
ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உப்பூரில் பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வெயிலுகந்த விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. முன்னதாக நேற்று காலை கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ேதரோட்டம்
அன்று மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. வருகின்ற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மாலை 3 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
19-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் விநாயகர் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. தீர்த்தவாரி பூஜை முடிந்து விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்த பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் சரக்கு பொறுப்பாளர் பாண்டியன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவிழாவையொட்டி கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.இந்த விநாயகர் கோவிலில் ராமபிரான் பூஜை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.