< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்

சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை 850 இடங்களில் சிலை வைத்து வழிபாடு

தினத்தந்தி
|
1 Sept 2022 12:03 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. 850 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. 850 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

நாமக்கல்

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 850 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். அதன்படி நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. இதையொட்டி சாமி பாலகணபதி, ராஜகணபதி, வில்லப கணபதி உள்ளிட்ட பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாமக்கல் நந்தவன தெருவில் உள்ள ஆர்ய வைஸ்ய நந்தவனத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிலைகளால் தோட்டம் உருவாக்கி, அதின நடுவே உள்ள குடிலில் பஞ்சமுக ஹேரம்ப கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு ஆர்ய வைஸ்ய வாலிபர் சேவா சங்கம், வாசவி மகிளா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் நாமக்கல் பிரதான சாலையில் உள்ள செங்கழநீர் பிள்ளையார் கோவிலில் நேற்று சதுர்த்தி விழாவையொட்டி சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. மாலையில் சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராசிபுரம்

இதேபோல் கடைவீதி சக்தி விநாயகர் வெள்ளிகவச அலங்காரத்திலும், ஏ.எஸ்.பேட்டை சக்தி விநாயகர் காலையில் தங்ககவசத்திலும், மாலையில் சந்தனகாப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் சதுர்த்தியையொட்டி நகர் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரை பொறுத்த வரையில் குளக்கரை திடல், தட்டார தெரு உள்பட 13 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதுதவிர பொதுமக்கள் சார்பில் 34 இடங்களில் சிலை வைக்கப்பட்டு, பூஜை நடத்தப்பட்டது.

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலையை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். ராசிபுரம் பட்டண ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு மலர்கள் மற்றும் அருகம்புல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது சக்தி விநாயகர் வெள்ளிகவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் அருகே 10 அடி உயரத்தில் சக்தி விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அதேபோல் புதுப்பாளையம் சாலையில் உள்ள மகா சக்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இ.பி. காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு மாலைகள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. அப்போது ராஜஅலங்காரத்தில் வலம்புரி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். ராசிபுரம் கடைவீதியில் உள்ள இரட்டை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ராசிபுரம் பழைய கோர்ட்டு அருகில் உள்ள செங்குட்டுவ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பரமத்திவேலூர், பள்ளிபாளையம்

பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள 12 அடி உயரமுள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவில் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை மகா கணபதி யாகம், அபிஷேகம், அலங்காரம், தனபூஜை, சுமங்கலி பூஜை, தீபபூஜை, மகா ஆராதனை நடந்தது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று பஞ்சமுக ஹேரம்ப விநாயகரை வழிபட்டனர். பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் பேட்டை பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தினர் செய்திருந்தனர். மேலும் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளிபாளையம் ராஜவீதியில் உள்ள ராஜகணபதி கோவில், பஸ் நிலையம் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில், முருகன் கோவில் அருகில் உள்ள அருள் விநாயகர் கோவில் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ காசி விநாயகர் கோயில், ஆவத்திபாளையத்தில் உள்ள கீர்த்தி விநாயகர் கோவில்களில் காலை முதல் விநாயகருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதல் வருகின்ற பக்தர்களுக்கு சுண்டல் பொங்கல் மற்றும் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்புதுப்பட்டி பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. நாமகிரிப்பேட்டையில் 55 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த போலீசார் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் மங்களபுரம், ஆயில்பட்டியில் 21 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 850 இடங்களில் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, வழிபாட்டிற்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்