சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வனப்பகுதியில் தங்கி நவராத்திரி விழா நடத்த அனுமதி கிடையாது - நீதிமன்றம்
|சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வனப்பகுதியில் தங்கி நவராத்திரி விழா நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு அகஸ்தியர் உட்பட 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் பக்கதர்களுக்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள சுந்தரபாண்டியம், அகத்தாப்பட்டி, வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் இருந்து 7 ஊரைச் சேர்ந்த நெசவாளர் பகுதி மக்கள் வருடம் தோறும் நவராத்திரி விழாவில் சதுரகிரி மலையில் தங்கியிருந்து வழிபாடு செய்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழிபாடு நடைபெறவில்லை. இந்த ஆண்டு மலையில் தங்கி இருந்து வழிபட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் சதுரகிரி மலையில் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்தனர். இதனால் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், உரிய அனுமதி இல்லாத கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு எவ்வாறு உரிமை கோர முடியும். ஒரு பிரிவினருக்கு அனுமதி கொடுக்கப்பட்டால், மற்ற பிரிவினரும் நீதிமன்றத்தை அணுகுவார்கள். வேண்டுமானால் குறிப்பிட்ட நாளில் காலை மற்றும் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்க முடியும். ஆனால் அந்த முடிவை வனத்துறைதான் எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதற்கான விரிவான உத்தரவு பிறகு வழங்கப்படும், என்று அவர் கூறினார்.