திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் தேர் சீரமைப்பு பணிகள் தீவிரம்
|திருத்தணி முருகன் கோவிலில் தேர் சீரமைப்பு பணிகள் மலைக்கோவில் வளாகத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும், பிரம்மோற்சவங்கள் நடக்கும்போது, மாடவீதியில் உற்சவர், தங்கத்தேர், வெள்ளித்தேர் போன்றவற்றில் உலா வருவதற்கு வசதியாக, தங்கத்தேர், வெள்ளித்தேர் கோவிலில் இருந்தன. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளித்தேர், தங்கத்தேர் பழுதடைந்தன. இதனால், தங்கத்தேர், வெள்ளித்தேர் சேவைகள் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக, வெள்ளி மயில் வாகனம் சேவை நடந்து வந்தது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு கடந்த ஆண்டு முருகன் கோவிலில் ஆய்வு செய்து பழுதடைந்த தங்கத்தேர், வெள்ளித்தேரை உடனடியாக சீரமைக்குமாறு கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் தங்கத்தேர் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
அதேபோல் வெள்ளித்தேர் செய்வதற்கு ஏதுவாக, மரத்தேர் செய்து தருவதாக பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கோவில் நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்தார். கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியதையடுத்து ரூ.32 லட்சம் செலவில் 10 அடி நீளம், 7½ அடி அகலம், 22 அடி உயரம் கொண்ட மரத்தேர் செய்யும் பணிகள் மலைக்கோவில் வளாகத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது. மரத்தேர் அமைக்கும் பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிவடையும் என்று திருத்தேர் ஸ்தபதி அருள் தெரிவித்தார்.
மரத்தேர் பணிகள் முடிவடைந்த பின் வெள்ளித்தேருக்கான தகடுகள் பதிப்பதற்கு இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.