அழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்..!
|அழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மதுரை,
108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சுந்தர்ராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளியுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா...கோபாலா... என பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை காண அழகர் மலை அடிவாரத்தில் மக்கள் அலைகடலென திரண்டனர்.
தேரோட்டத்தை பக்தர்கள் காண ஆங்காங்கே அகன்ற திரைமூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.