< Back
மாநில செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

விருத்தகிரீஸ்வரர் கோவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்

தினத்தந்தி
|
5 March 2023 7:32 PM GMT

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம்நமசிவாய என்கிற பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விருத்தாசலம்,

மாசிமக பெருவிழா

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமகப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினசரி காலை இரவு நேரங்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வீதிஉலா நடைபெற்று வருகிறது.

பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம்

9-ம் திருவிழாவான நேற்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு கோவிலில் உள்ள நூறுகால் மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.

தேரோட்டம்

பின்னர் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து புறப்பட்டு, கிழக்கு கோட்டை வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட இருந்த தேர்களில் தனித்தனியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு முதலாவதாக விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் தென்கோட்டை, மேற்கு கோட்டை, வடக்கு கோட்டை வீதிகள் வழியாக கிழக்கு கோட்டை வீதியை வந்தடைந்தது. பின்னர், 7.25 மணிக்கு வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

அதன்பின்னர், விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேரை, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் நமசிவாய, சிவசிவா என்கிற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்கு கோட்டை வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது, கண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அதை தொடர்ந்து விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் போது நான்கு கோட்டை வீதிகளிலும் பக்தர்கள் கோலமிட்டு தேரை வரவேற்றனர்.

போலீசார் தீவிர கண்காணிப்பு

முன்னதாக தேரோட்டத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அப்போது ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.

விழாவின் போது அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டும், உயர் கோபுரங்கள் அமைத்தும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இன்று தீர்த்தவாரி

விழாவில் இன்று (திங்கட்கிழமை) மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(புதன்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்