< Back
மாநில செய்திகள்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தினத்தந்தி
|
9 July 2023 2:14 AM IST

தஞ்சை மேரீஸ் கார்னர் மேம்பாலம் கட்டியதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது கும்பகோணம் கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தஞ்சாவூர்;

தஞ்சை மேரீஸ் கார்னர் மேம்பாலம் கட்டியதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது கும்பகோணம் கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மேரீஸ் கார்னர் மேம்பாலம்

தஞ்சை மேரீஸ் கார்னர் முதல் வண்டிக்காரத்தெரு வரை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பால பணிகள் தரமாக இல்லை எனவும், சரியான திட்டமிடலுடன் கட்டப்படவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் அப்போதே எழுந்தது.மேம்பாலம் கட்டியபோதே பாலத்தில் லேசான விரிசலும் ஏற்பட்டது. இதை அறிந்த அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், தஞ்சைக்கு நேரில் வந்து பாலத்தில் ஏற்பட்ட விரிசலை பார்வையிட்டார். மேலும் அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

முறைகேடு புகார்

இந்த நிலையில், பாலம் கட்டுமான பணியை திருச்சியை சேர்ந்த தேவேந்திரன்(வயது 55) என்பவர் ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டார். அப்போது தஞ்சை நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றிய கோட்ட பொறியாளர் கந்தசாமி(57), உதவி கோட்ட பொறியாளர் இந்திராகாந்தி(50), உதவி பொறியாளர் இந்துமதி(50) உள்ளிட்டோர், ஒப்பந்தக்காரரான தேவேந்திரனுக்கு ஆதரவாக பாலத்தின் கீழ்ப் பகுதியில் சில வேலைகளை செய்யாமலேயே, செய்ததாக கணக்கு காட்டியும், பாலத்தின் அளவை குறைத்து தரமில்லாமல் கட்டியும் போலியாக பில் தயாரித்து முறைகேடு செய்துள்ளதாக புகார் வந்தது.இது குறித்து ஆய்வு செய்தபோது அது உண்மை என தெரியவந்த நிலையில் தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

தொடர் விசாரணையில், ரூ.28 லட்சம் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக, பொறியாளர்கள் கந்தசாமி, இந்திரா காந்தி, இந்துமதி, ஒப்பந்ததாரர் தேவேந்திரன் உள்ளிட்ட 4 பேர் மீது கும்பகோணம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மேலும் செய்திகள்