< Back
மாநில செய்திகள்
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
மாநில செய்திகள்

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

தினத்தந்தி
|
19 Jan 2024 11:09 PM IST

680 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகை முன்பு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீச முயன்றார். கவர்னர் மாளிகையின் வெளியே நின்றிருந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன. மேலும், அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே இந்த பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் தேசிய புலானாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் தாக்கல் செய்துள்ளது. 680 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் கவர்னர் மாளிகை வலியுறுத்தியபடி இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124ஐ என்.ஐ.ஏ. சேர்த்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124 என்பது ஜனாதிபதி அல்லது கவர்னரை தாக்குதல் அல்லது தாக்க முற்படுவதாகும். ஏற்கெனவே கருக்கா வினோத் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்