திருப்பத்தூர்
பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
|முறையாக விசாரணை செய்யாத பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 5-ந் தேதி தனது மகளை பாலியல் துன்புறுத்தல் செய்து கர்ப்பாக்கிய விவசாயிகள் மாணிக்கம், கோவிந்தன் ஆகியோர் மீது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்தார். இதனை இன்ஸ்பெக்டர் சாந்தி முறையாக விசாரிக்காமல் ஊர் பஞ்சாயத்தாரர்களிடம் பேசி விட்டு வரும்படி கூறியதாக தெரிகிறது.
இதனிடையே இந்த சம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் மாணிக்கம் என்பவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வாணியம்பாடிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். புகார் குறித்து முறையாக விசாரணை செய்யாத இன்ஸ்பெக்டர் சாந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்று போலீஸ் இன்ஸ்பெக்டராக மலர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சாந்தி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டார்.