மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்..? நாளை வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..? - முதல்-அமைச்சரின் அதிரடி பிளான்
|தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில், 2021ம் ஆண்டு மே 7-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்தது. பதவியேற்ற ஓராண்டுக்குள் அமைச்சரவையில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 14-ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். டிசம்பர் 15ம் தேதி 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டன.
இந்நிலையில், அமைச்சர்கள் மற்றும் துறை ரீதியான செயலாளர்களின் செயல்பாடுகள், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன்படி, துறை ரீதியான செயலாளர்களை மாற்றவும், தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதித்துறை, சட்டத்துறை, பால்வளத்துறை, தகவல் தொழில்நுட்பம், செய்தித்துறை, கைத்தறி ஆகிய துறைகளில், அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த இலாகா மாற்றத்தில் யார்? யார்? இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.