சென்னை
மாதவரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்காக குடிநீர் இணைப்பு மாற்றம் - 2 நாட்கள் தண்ணீர் வினியோகம் நிறுத்தம்
|மாதவரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்காக குடிநீர் இணைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் 2 நாட்கள் தண்ணீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இதுக்குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாதவரம் பால் பண்ணை சாலையில் மெட்ரோ ரெயில் நிலைய பணிகளுக்காக புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் பிரதான குழாய்கள் மாற்றி இணைக்கும் பணிகள் நாளை (திங்கட்கிழமை ) காலை 8 மணி முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை ) காலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நாட்களில் விநாயகபுரம், பொன்னியம்மன் மேடு, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் பெரம்பூர் (பகுதி), புளியந்ததோப்பு (பகுதி) உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இப்பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிந்துவிட்டால் 24-ந்தேதி மாலை முதல் இந்த பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளவும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் தேவைப்பட்டால், மாதவரம் பகுதிக்குட்பட்ட விநாயகபுரம், பொன்னியம்மன் மேடு (பகுதி-3, என்ஜினீயர்- 81449 30903), கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பட்டேல் நகர், புதுவண்ணாரப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை (பகுதி-4, என்ஜினீயர்- 81449 30904), பெரம்பூர் மற்றும் புளியந்தோப்பு பகுதி மக்கள் (பகுதி-6, என்ஜினீயர்- 81449 30906) ஆகிய அதிகாரிகளை தொடர்புக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.