வருகிற 23-ந்தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
|வருகிற 23-ந்தேதி சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என்று திருச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
வெற்றிகரமாக இறங்கும்
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் நேற்று நிலாவும், உலக அமைதியும் என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- சந்திரயான்-2 திட்டத்தில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு சந்திரயான்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வருகிற 23-ந்தேதி வெற்றிகரமாக இறங்க உள்ளது. அப்போது பழுதோ, சிக்கல்கள் ஏற்பட்டாலோ அதனை நிவர்த்தி செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, சந்திரயான்-3 திட்டமிட்டபடி சாதிக்கும்.
நிலவில் நீர் உள்ளதை கண்டறிந்துள்ளதைத் தொடர்ந்து வேறு மூலப் பொருள்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பயணம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சந்திரயான் நிலவில் இறங்க உள்ள இடம் கரடு, முரடாக இல்லாமல் தரையிறங்க ஏதுவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
போட்டி இல்லை
இதன்தொடர்ச்சியாக சந்திரயான்-4 திட்டமானது நிலவில் இறங்கி அங்கு கனிம பொருட்கள் இருப்பின் அதனை பூமிக்கு எடுத்து வரும் வகையில் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. நிலவில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளும், வாய்ப்புகளும் உள்ளன. நிலவில் நீர் உள்ளதை உறுதி செய்திருப்பதால் ஆக்சிஜன், ஹைட்ரஜன் உற்பத்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. அங்கு மனிதனை அனுப்புவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. 1960-ம் ஆண்டுகளில் நிலவில் முதலில் கால் பதிப்பது யார் என உலக நாடுகளுக்கு இடையே போட்டி இருந்தது. தற்போது அந்த போட்டி இல்லை. உலக நாடுகளின் அமைதிக்கான இடமாக நிலவு இடம் பெற வேண்டும். இந்தியாவின் சந்திரயான்- 3, ரஷியாவின் லூனா-25 ஆகியவற்றுக்கு இடையே போட்டி என்று கருத வேண்டியதில்லை. இரண்டுமே ஒரே மாதிரியான பயணத்தில் தான் உள்ளன.
நிலவில் விண்வெளி மையம்
இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் வேகம் குறைவாக இருந்த போதிலும், வெற்றி வாய்ப்பு சிறப்பாகவே உள்ளது. அதே நேரத்தில் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறும் கலன்களையும், ஏவுகணைகளையும் மட்டுமே இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது. இதற்கு பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகியவை சிறந்த உதாரணமாகும்.
இந்தியா மட்டுமின்றி ரஷியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து நிலவு குறித்த ஆய்வுகளை செய்ய தயார் நிலையில் உள்ளன. பூமி அருகே அமைக்கப்பட்டுள்ள விண்வெளி ஆய்வு மையத்தைப் போன்று, நிலவுக்கு அருகிலோ அல்லது நிலவிலோ சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உருவாகும். அதில், இந்தியாவும் தனது பங்களிப்பை சிறப்பாக மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.