< Back
மாநில செய்திகள்
சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
மாநில செய்திகள்

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

தினத்தந்தி
|
4 Jun 2024 10:00 PM IST

ஆந்திராவின் முதல்-அமைச்சராக சந்திரபாபு நாயுடு வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

சென்னை,

ஆந்திரா சட்டசபைக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், தெலுங்குதேசம் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்று 16 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதன்மூலம் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து முன்னிலையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரி ஆகிறார்.

ஜனசேனா கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்று 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. 6 தொகுதிகளில் வெற்றி பெற்று 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்று 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

ஆந்திராவின் முதல்-அமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர், "ஆந்திர பிரதேசத்தை தலைமையேற்று நடத்த சட்டமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியைப் பெற்ற சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாழ்த்துகள். தொலைநோக்கு பார்வை கொண்ட உங்கள் தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக இடங்களை வென்று ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று, 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கு வாழ்த்துகள். ஆந்திர மக்களுக்கு சேவை செய்யும் உங்களின் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்