< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு நிராகரிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு நிராகரிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

தினத்தந்தி
|
5 Jun 2024 12:17 PM IST

பிரதமர் மோடியை ராமரும் கைவிட்டார், விவேகானந்தரும் கைவிட்டார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தமிழ்நாட்டு மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்று நடத்திய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் பேசவுள்ள எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்.

இந்தியாவை கூறுபோட நினைத்த பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். கூட்டணி ஆட்சியமைக்க மோடி நினைக்கிறார். ஆனால் அது ஒரு போதும் நடக்காது. இந்தியா கூட்டணி கட்சியினர் மக்களின் குரலாக இருப்பார்கள்.

ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. பிரதமர் மோடியை ராமரும் கைவிட்டார், விவேகானந்தரும் கைவிட்டார். ராமர் நிராகரித்த பாஜகவை சந்திரபாபு நாயுடு ஏன் நிராகரிக்கவில்லை?. மக்கள் நலனுக்காக மோடியை சந்திரபாபு நாயுடு நிராகரிக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி எழுதி கொடுப்பதை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்றார்; அதன் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையும் என பிரதமர் மோடி மாற்றி கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்