அரியலூர்
சந்திரா ஏரியில் பிணமாக கிடந்த கூலி தொழிலாளி
|சந்திரா ஏரியில் பிணமாக கிடந்த கூலி தொழிலாளி குளித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சூரியமணல் கிராமத்தில் உள்ள சந்திரா ஏரியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்த உடலை மீட்டு விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் சூரியமணல் வடக்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி சபரி என்கிற சபரிநாதன் (வயது 40) என்பதும், இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், சாதனாமேரி, இலக்கியா என்று 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் சபரியின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சபரியின் தலையில் பலத்த காயம் இருந்ததால் ஏரியில் குளிக்கும்போது தலைகீழாக குதித்ததில் தலையில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் அடித்துக்கொன்று ஏரியில் வீசி இருப்பார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.