விருதுநகர்
கேந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்
|அருப்புக்கோட்டை பகுதிகளில் கேந்தி பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி, கட்டங்குடி, தொட்டியாங்குளம், போடம்பட்டி, முத்தாரப்பட்டி, குறிஞ்சாங்குளம், செம்பட்டி, பி. தொட்டியாங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கேந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இங்கு விளையும் கேந்தி பூ அருப்புக்கோட்டை, விருதுநகர், தோவாளை உள்ளிட்ட பூ மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது. இந்த கேந்தி பூக்கள் அனைத்தும் மாலை கட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. சாதாரண நேரத்தில் கிலோ ரூ.30 க்கு விற்பனை செய்யப்படும் கேந்தி பூ பண்டிகை காலங்களில் கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழைக்காலத்தில் தான் கேந்தி பூ விளைச்சல் அமோகமாக இருக்கிறது.
இதுகுறித்து பி.தொட்டியாங்குளத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி கூறியதாவது:-
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கேந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை பெய்தால் தான் கேந்தி பூ அதிகமாக மலரும். தற்போது அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கேந்தி பூ விளைச்சல் அமோகமாக உள்ளது. அதே நேரத்தில் வரும் வாரம் ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளது.
விளைச்சல் அமோகமாக இருப்பதால் இந்த பண்டிகை காலத்தில் கேந்தி பூ விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.