< Back
மாநில செய்திகள்
இந்தாண்டு வடகிழக்கு பருமழையில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவு - வானிலை ஆய்வு மையம் கணிப்பு
மாநில செய்திகள்

இந்தாண்டு வடகிழக்கு பருமழையில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவு - வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தினத்தந்தி
|
3 Nov 2022 10:30 AM IST

இந்தாண்டு வடகிழக்கு பருமழையில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவு என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியவுடன் தமிழகத்தில் பரவலாக கன மழை, மிக கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தின் போது வருகிற 10-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் பெரும்பாலும் காற்றழுத்தங்கள், காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

வருகிற 10-ந்தேதி வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை, தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும். வருகிற 15-ந்தேதி உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின் மையப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்லும். அப்போது தமிழகம் முழுவதும் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மழை பெய்யும். குறிப்பாக இயல்பை விட அதிக அளவில் மழை பெய்யக் கூடும்.

இந்த மாதம் 4-வது வாரத்தில் ஒரு காற்றழுத்தம் உருவாகி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன் காரணமாக தமிழகத்தில் 27-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் ஒரு நிகழ்வு உருவாகும். இதன் மூலம் டிசம்பர் 20-ந்தேதி வரை மழை பெய்யும்.

டிசம்பர் மாதம் 25-ந் தேதி மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகிறது. இது சிறிய புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. இந்த புயல் கடல் பகுதியில் உருவாகும் நீராவியை மட்டும் கொண்டு வந்து மழையாக பெய்யும். டிசம்பர் மாத இறுதியில் மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகும். அதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.

2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1, 2, 3-ந்தேதிகளில் காற்றழுத்தம் உருவாக உள்ளது. ஜனவரி மாதம் 3-வது வாரத்திலும் ஒரு காற்றழுத்தம் உருவாக உள்ளது. அப்போது தென் மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே இந்த வடகிழக்கு பருவமழை காலம் அதிக அளவில் மழையை கொடுக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்