சென்னை உள்பட 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
|புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று காலை புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து தென்கிழக்காக 210 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. மிக்ஜம் புயல் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்ற நிலையில் தற்போது நகரும் வேகம் சற்று குறைந்தது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வங்கக் கடலின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஆந்திரம் மற்றம் தமிழகத்தை ஒட்டி டிசம்பர் 4ஆம் தேதி வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு, சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.