தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
|வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் வெயில் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 24-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று முதல் 25-ந் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.