தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு...!
|வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.
சென்னை,
மிக்ஜம் புயல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கரையைக் கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரபிக் கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரளாவை நோக்கி நகா்ந்து வருவதன் காரணமாக வங்கக் கடலில் இருந்து குளிா்ச்சியான காற்று ஈா்க்கப்படுவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும்.
மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் டிசம்பர் 9 -ம் தேதியன்று தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூா் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.